Headlines News :
Home » » தமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.

தமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.

Written By TamilDiscovery on Wednesday, June 26, 2013 | 12:12 AM

1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும்.

2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை. வாழும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டித்திரியாமல் நன்றாக விலகிக் கட்புலம் எட்டக்கூடிய தொலைவில் நடமாடக் கூடியவர்கள். அவர்களை அழைப்பதற்கு, ஓங்கி குரலெடுத்துக் கூப்பிடுவதற்குத் தமிழும் அதன் இனமான திராவிட மொழிகளும் ஏற்றவை. குடியிருப்புப் பகுதியிலிருந்து காட்டுக்குள் வேலை செய்கின்றவர்களை எட்டும் அளவுக்கு ஓங்காரமாய்க் கூவி அழைத்துச் செய்தி தெரிவிக்கும் காட்சியை இன்றும் ஊர்ப்புறங்களில் காணலாம்.

3. தமிழில் பேசுவதற்கு சுவாசமண்டலம் ஏராளமான காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற வேண்டியிருக்கும். தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுவதே நெஞ்சுரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இதமான பயிற்சியாகும். உதாரணத்திற்கு பாரதியார் பாடல்கள் சிலவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள். இரண்டு சுற்று மைதானத்தில் ஓடியதுபோல் மூச்சு வாங்கும்.

4. தமிழ் முதன்மையாக இசைத்தன்மை வாய்ந்த மொழியாகும். தமிழில் நல்ல பொருள்வளத்துடன் வழங்கும் எந்தவொரு சொற்றொடரும் தன்னளவில் இனிய இசைப்பாங்குடன் அமையப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். அந்தத் தன்மையால்தான் திராவிட மொழிகளில் எண்ணற்ற பழமொழிகள் தோன்றின. பேச்சுப் புலமை மட்டுமே தகுதியாய்க்கொண்டிருந்த பாமர மக்கள், வாழ்வியல் உண்மைகளை அவர்கள் பேசும் தொடர்களில் ஏற்றிவைத்தனர். இந்த இசைத்தன்மை மொழியின் இயற்கையான பண்பாக இருப்பது தனித்த சிறப்பு.

5. தமிழ் அளவில்லாத சொல்வளம் பெற்றிருக்கும் மொழியாகும். தமிழில் வழங்கும் பெயர்ச்சொற்கள் ஒன்றிரண்டோடு சுட்டி முடிந்துவிடுவதில்லை. ஒன்றைக் குறிக்க மிகச் சாதாரணமாகப் பத்திருபது பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. அதேபோல் ஒற்றைச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்களும் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பாணி என்ற வெறும் இரண்டெழுத்துச் சொல்லுக்கு – காலம், தாமதம், நீண்ட காலம், இசைப்பாட்டு, இசை, ஒலி, இசையுறுப்பாகிய தாளம், அழகு, அன்பு, முல்லை யாழ்த் திறத்துள் ஒன்று, பறைப்பொது, கூத்து, கை, பக்கம், சொல், சர்க்கரைக் குழம்பு, கள், பழச்சாறு, இலைச்சாறு, மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை, நீர், ஊர், நாடு, ஊர்சூழ் சோலை, காடு, பூம்பந்தர், பலபண்டம், கடைத்தெரு, நடை, சரகாண்டபாடாணம், பாடினி – என்று எத்தனை பொருள்கள் வழங்குகின்றன, பாருங்கள் !

6. ஒரு மொழியின் உயிர்நாடி அதில் வழங்கும் வினைச்சொற்கள்தாம். அம்மொழி பேசும் மக்கள் எத்தகைய வினைத்திட்பம் மிக்கவர்கள் என்பதையும் அச்சொற்களே எடுத்தியம்புகின்றன. தமிழ் வினைச்சொற்களின் அருமை என்னவென்றால் அவற்றுள் ஏராளமானவை பெயர்ச்சொற்களைப் போலவே வடிவில் எளியதாயும் அளவில் சின்னஞ்சிறிதாயும் இருப்பவை. உதாரணத்திற்குப் ‘பொங்கு’ என்ற இந்தச் சிறிய வினைச்சொல் பத்துக்கும் மேற்பட்ட செயல்களைச் சுட்டுவதாகும். அவை (பொங்குதல்) : காய்ந்து கொதித்தல், கொந்தளித்தல், மிகுதல், பருத்தல், மேற்கிளர்தல், மகிழ்தல், சினத்தல், செருக்குறுதல், நுரைத்தல், விளங்குதல், மயிர் சிலிர்த்தல், வீங்குதல், விரைதல், துள்ளுதல், கண் சூடடைதல், உயர்தல், செழித்தல், ஒலித்தல், சமைத்தல்.

7. ஒருவரின் சிந்தனைப் பாங்கு அவர் பேசுகின்ற மொழியோடு தொடர்புடையது. எண்ணம் வெறும் படிமத்தளத்தில் தோன்றுவது. அந்தப் படிமத்தை விளக்குவதற்கு, குறைந்தபட்சம் எண்ணியவரே விளங்கிக்கொள்வதற்கு அவருக்குத் தெரிந்த மொழியே துணை. எண்ணியவற்றை விளக்க, போதாக்குறையோடு ஒருவரின் மொழி இருந்தால் அந்த எண்ணத்தால் ஆகக்கூடிய நன்மை என்ன ? வளமான தாய்மொழியை வாய்க்கப் பெற்றவர் தம் எண்ணங்களை படிமத் தளத்திலிருந்து இல்லை, மொழித்தளத்திலிருந்தே உருவாக்கிக் கொள்ள வல்லவர் ஆவார்.

8. வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யெழுத்துகளும் உயிர்மெய்யெழுத்துகளும் தமிழின் உச்சபட்சச் சிறப்பாகும். ‘தமிழ்’ என்ற பெயரே இந்த மூன்று வகை எழுத்துகளையும் பயன்படுத்தி வழங்கும் பெயர் என்பர். த – வல்லின உயிர்மெய். மி – மெல்லின உயிர்மெய். ழ் – இடையின மெய். வன்மையாகக் கூறவேண்டிய இடத்தில் வல்லின மெய்களையும் வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் மிகுதியாகப் பயன்படுத்தி முழங்கினால், அந்த முழக்கம் முழங்குபவரின் உடலையும் மனத்தையும் பறைபோல் அதிரச் செய்துவிடக்கூடியது. ’எரிமலை எப்படிப் பொறுக்கும் ? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ? சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் துன்பச் சிறையின் கதவு தெறிக்கும் !’ – இவ்வரிகளில் வல்லின மெய் மற்றும் வல்லின உயிர்மெய்கள் மிகுந்து புழங்குவதால் உச்சரிப்பும் ஒலிப்பும் வன்மை உணர்ச்சி ததும்ப இருக்கின்றன.

9. மெல்லின மற்றும் இடையின மெய்களைப் பயன்படுத்தி எழுதினால் தமிழ்மொழி மென்மையின் தடத்தில் அதிராமல் நடக்கும். அவ்வகையான சொற்களை உரிய மாத்திரை அளவுகளில் திருத்தமாக உச்சரித்தால் மயக்கமே வந்துவிடும். உதாரணத்திற்கு ‘மெல்ல நட… மெல்ல நட… மேனி என்னாகும் ? சின்ன மலர்ப்பாதம் நோகும் ! உந்தன் சின்ன இடை வளைந்துவிடும் ! வண்ண சிங்காரம் குலைந்துவிடும்.’ மெல்லின மெய்களின் மென்மை புரிகிறதா ? (உங்க ளுக்கு எளிதில் விளங்கவேண்டும் என்பதற்காகவே திரைப்பாடல் உதாரணங்களைக் கூறியுள்ளேன். பாடல்கள் உச்சரிப்பொலிகளையும் கூடுதலாக நினைவூட்டும் என்பதற்காகவும்)

10. உலகில் எத்தனை இனங்களுக்குச் சொந்தமான தாய்மொழி வாய்த்திருக்கிறது என்று சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழ நேர்ந்தவருக்கும் உடன் வரும் சொத்து அவர்களின் தாய்மொழி. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எத்தனை மொழிகள் பேசும் உதடுகளற்றுச் செத்தன என்று எண்ணுங்கள். இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழி பேசுவாரற்று ஆராய்ச்சிக் கூடத்தில் இன்று அடங்கிவிட்டது. வெறும் ஆயிரங்களில் சொற்களையுடைய மொழிகளைக்கூட அந்தந்த இனத்தினர் விடாது பற்றிக்கொண்டுள்ளனர். நம் பிள்ளைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் பயிலட்டும். ஆனால், தமிழைப் பழுதறக் கற்றுவிடட்டும்.


தமிழ் மொழி எழுத்து இலக்கணம். எழுத்து இலக்கணம் என்பது எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளை கூறுவன. மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது.

தமிழில். 247 எழுத்துக்கள் உண்டு. அவை உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து 1 என்பனவற்றை கொண்டுள்ளன. இவ் எழுத்துக்கள் அனைத்தினையும் முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என இரண்டு வகையாக . பிரிக்கலாம் உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில்  என இரண்டுவகையாக பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன  குறில் எனவும் நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும். மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினை கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன.

அதாவது வலிய ஓசை , மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும். தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றிய லிகரம் 7) ஐ காரக் குறுக்கம் 8) ஒளகாரக் குறுக்கம் 9) மகரக் குறுக்கம் 10) ஆய்தக் குறுக்கம் என 10 வகையாக பிரித்து கூறுவர். தமிழில்  உயிர் எழுத்துக்கள் 12 உடன் மெய் எழுத்துக்கள் 18 சேர்வதினால் (12 *18 = 216) 216 உயிர்மெய் எழுத்துக்கள்  தோன்றுகின்றன. (உதாரணம் : க் + அ = க, க் + ஆ = கா க் + இ = கி க்+ஈ = கீ க் + உ = கு) தனி நிலை எழுத்து என அழைக்கப்படும் ஆய்த எழுத்து ஒன்றும் ( ஃ ) தமிழில் உண்டு இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் தனக்கு பின்னே ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் துணையாக கொண்டு வரும்.

உதாரணம் : அஃது, இஃது, எஃது ) தமிழ் மொழியில் ஒரு பொருளை கண், கை அல்லது கருத்தால் குறிப்பிட்டு காட்டி உணர்த்தும் வகையில் வரும் எழுத்து சுட்டெழுத்து எனப்படும். அந்தவகையில் அ, இ, உ என்ற மூன்றும் சுட்டுப் பொருளில் வந்தால் சுட்டடெழுத்துக்கள் என அழைக்கப்படும்.

உதாரணம் : அவன், அது, இவன், இது, உவன், உது. இதனையும் அண்மைச் சுட்டு ( இது, இவன்) சேய்மைச் சுட்டு (அது, அவன்) என இருவகையாக பிரிக்கலாம். தமிழில் ஆ, எ, ஏ, ஓ, யா என்ற ஐந்து எழுத்துக்கள்  வினா பொருளை உணர்த்துவதனால் அவை வினா எழுத்துக்கள் எனப்படுகின்றன

உதாரணம் : அவனா? (ஆ), எது? (எ), அவனோ? (ஓ), யாது? (யா) ) இவ் எழுத்துக்களையும் வினாவில் இடம்பெறும் இடத்தினை கொண்டு சொல்லின் முதலில் வருவன (எ, ஏ, யா ), செல்லின் இறுதியில் வருவன (ஆ, ஓ, ஏ) இரண்டிலும் வருவன (ஏ – அன்றே?) என மூன்று வகையாக பிரிக்கலாம். தமிழில் உள்ள இவ்வாறான 247 எழுத்துக்களையும் அவை  ஒவ்வொன்றையும் உச்சரிக்கும் கால அளவினை மாத்திரை என்று கூறுவர். அந்த வகையில் குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரையினையும், நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரையினையும் மெய் எழுத்துக்கள் அரை மாத்திரையினையும், ஆய்த எழுத்து அரை மாத்திரையினையும் கொண்டது. தமிழ் மொழியின் சொல்லுருவாக்கத்தில் 12 உயிர் எழுத்துக்களும், க், ச், த், ந், ப், ம், ய், வ், ஞ், ங் போன்ற 10 உயிரோடு இணைந்த மெய் எழுத்துக்களுமே சொல்லின் முதலில் வரும் எழுத்துக்களாகும்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template